சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற டிராக்டர் டிரைவர் கைது
கண்டாச்சிபுரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையை துடைப்பத்தால் தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்:
கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவரான மனோகர் மகன் குமார் (32) என்பவர், கம்பியில்லாத ஜன்னல் வழியாக அந்த சிறுமியின் வீட்டிற்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
உடனே அந்த சிறுமி கூச்சலிட்டதால் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் சிறுமியின் பெற்றோர், இதுபற்றி குமாரிடம் கூறி தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த குமார், அவரது தந்தை மனோகர், தாய் சாந்தி, குமாரின் சகோதரர் குணா, இவரது மனைவி சரளியா ஆகியோர் சேர்ந்து அச்சிறுமியின் தந்தையை சாதி பெயரை சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
டிராக்டர் டிரைவர் கைது
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மனோகர் உள்ளிட்ட மற்ற 4 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.