டிராக்டர் கவிழ்ந்து வடமாநில வாலிபர் பலி
நாட்டறம்பள்ளி அருகே நடுரோட்டில் டிராக்டர் கவிழ்ந்ததில் வட மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மின்கம்பம் ஏற்றி சென்றனர்
நாட்டறம்பள்ளி பகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைத்தல் மற்றும் புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் இருந்து டிராக்டரில் மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த சம்ராடு (வயது 29) என்பவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அரியானா மாநிலத்தை சேர்ந்த அனில் (37) என்பவர் மின்கம்பங்கள் மீது அமர்ந்திருந்தார்.
வடமாநில வாலிபர் பலி
பங்காளமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் டிரெய்லர் திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் டிராக்டரில் இருந்து மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது. இதில் அதன்மீது அமர்ந்திருந்து அனில் கீழே விழுந்தார். அவர் மீது மின்கம்பங்கள் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.