இரும்பு சக்கரங்கள் பொருத்தி தார்சாலையில் வலம் வரும் டிராக்டர்கள்
அரசு உத்தரவை மீறி, இரும்பு சக்கரங்கள் பொருத்தி தார்சாலையில் டிராக்டர்கள் வலம் வருகின்றன.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்கான நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, வீரப்பநாயக்கன்குளம், காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் நாற்று நடுவதற்காக டிராக்டர்கள் மூலம் உழவு பணி நடக்கிறது. இதற்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வயல்களில் உழவு பணி முடிந்ததும் இரும்பு சக்கரங்களுடன் அங்குள்ள சாலைகளில் டிராக்டர்கள் வலம் வருகின்றன. இதனால் தார்சாலை சேதம் அடைந்து வருகிறது.
விளைநிலங்களில் மட்டுமே டிராக்டர்களில் இரும்பு சக்கரம் பொருத்த வேண்டும் என்றும், தார்சாலையில் அதனை பொருத்தி ஓட்டக்கூடாது என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வயல்வெளிகள் நிறைந்த சுருளிப்பட்டிரோடு, காமயகவுண்டன்பட்டி ரோடு பகுதிகளில் அரசு சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு உத்தரவை மதிக்காமல் சில டிரைவர்கள் இரும்பு சக்கரங்களுடன் தார்ச்சாலையில் டிராக்டர்களை ஓட்டி செல்கின்றனர். இதனால் சாலை சேதம் அடைந்து வருகிறது. எனவே இதுபோன்ற டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.