கொண்டலாம்பட்டி பகுதியில் பெண்கள், காதலர்களை மிரட்டி நகை-பணம் பறித்த வியாபாரி கைது
கொண்டலாம்பட்டி பகுதியில் பெண்கள், காதலர்களை மிரட்டி நகை, பணம் பறித்து வந்த சர்க்கரை வியாபாரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
இளம்பெண்ணிடம் நகைபறிப்பு
சேலம் நகரை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அந்த புகாரில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 45) என்ற சர்க்கரை வியாபாரி தனது தந்தையின் உறவினர் என்று அறிமுகமாகி பேசியதாகவும், தன்னை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே நைசாக பேசி அழைத்து சென்று, தனது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், அவர் தனது தந்தையின் உறவினர் இல்லை என்பதும், மோசடி நபர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் குறித்து தனிப்படை அமைத்து சரவணனை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சரவணன் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் நின்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைது
சரவணன் இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளாக பல பெண்களிடம் மற்றும் காதலர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும்போது அவர்கள் பேசுவதை படம் எடுத்து மிரட்டி ஏமாற்றி நகை, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் சரவணனிடம் இது போன்று நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் சரவணன் மீது புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.