சாராயம் காய்ச்சுவதற்கான வெல்லத்தை பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
குடியாத்தம் அருகே சாராயம் காய்ச்சுவதற்கான வெல்லத்தை பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற மணிவண்ணன் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டு இருந்தார்.
இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள வெல்ல மண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வினியோகம் செய்வதற்காக வெல்ல மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் தகவல் அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அவரது தனிப்படையினர் நேற்று காலை நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள வெல்ல மண்டியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கள்ளச்சாராயத்திற்கு வினியோகம் செய்வதற்காக வைத்திருந்த 40 மூட்டை வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வெல்ல மூட்டைகளையும், அதன் உரிமையாளரையும் குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து வெல்ல மண்டி உரிமையாளர் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.