வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
கயத்தாறில் திருமணமாகாத ஏக்கத்தில் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறில் திருமணமாகாத ஏக்கத்தில் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
கயத்தாறில் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவில் தூண்டல்முத்து என்பவரின் மகன் பேச்சிமுத்து (வயது 28). ஊறுகாய் வியாபாரி. மேலும் இவர் பல்வேறு உணவு பொருட்களை பாக்கெட் போட்டும் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்து விட்டார். தாயார் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயாரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்களிடமும் தனக்கு பெண் பார்க்குமாறு அவர் கேட்டு கொண்டாராம். ஆனால் அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்யவில்லையாம்.
திருமண ஏக்கம்
இதில் அவர் மனமுடைந்து காணப்பட்ட அவர், திருமண ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலிப் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்றனர். வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.
தூக்கில் பிணம்
வீட்டிற்குள் உள்ள முற்றத்தில் பேச்சிமுத்து தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அவர் இறந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலம் இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.