தங்கும் விடுதியில் பிணமாக கிடந்த வியாபாரி
கும்பகோணத்தில் உள்ள தங்கும் விடுதியில் வியாபாரி ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). வியாபாரியான இவர் வியாபார விஷயமாக கடந்த 8-ந் தேதி கும்பகோணம் வந்துள்ளார். பின்னர் அன்று இரவு கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
அவர், கடந்த 2 நாட்களாக அறையில் இருந்து வெளியே வரவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி நிர்வாகிகள் கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
காரைக்குடியை சேர்ந்தவர்
தகவலின்பேரில், மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ராமசாமி பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே சாப்பிட்டது போக மீதி புரோட்டா கிடந்தது.
பின்னர், தங்கும் விடுதியில் அவர் கொடுத்த முகவரியை போலீசார் பார்த்தபோது அவர், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த முகவரியில் உள்ள உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.