மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி ஒருவர் பலியானார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ஜாபருல்லா (வயது 43). இவர் பினாயில் மற்றும் சோப்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மொபட்டில் பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவுக்கு சென்றார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு ஊருக்கு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் ஜி.மீனாட்சிபுரம் விலக்கு அருகே ஜாபருல்லா மொபட்டில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது தேனியில் இருந்து ஆத்தூர் சென்ற மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் ஜாபருல்லா, மோட்டார் சைக்கிளில் வந்த ஆத்தூர் அருகே உள்ள ஏ.புதூரை சேர்ந்த கோகுல் (19) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாபருல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.