கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 May 2023 12:30 AM IST (Updated: 25 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு முன்னுரிைம அளிக்கக்கோரி, கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கடைகள் அடைப்பு

பழனி அடிவாரம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் உள்ளூர் பக்தர்களை கோவில் அதிகாரி ஒருவர் முறையாக அனுமதிக்காமல் தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார். இதை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை அடிவாரம் சன்னதிவீதி, கிரிவீதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் பழனி கோவில் தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் மற்றும் பழனி டவுன் போலீசார் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழனி மலைக்கோவிலில் உள்ளூர் பக்தர்களை அனுமதிக்காமல் மிரட்டல் விடுத்த கோவில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளூர் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் நாட்களில் பக்தர்கள், வியாபாரிகள் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என வலியுறுத்தினர்.

அதன்பின்னர், அதிகாரிகள் தரப்பில், இதுபற்றி துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதையடுத்து வியாபாரிகள், இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். வியாபாரிகளின் இந்த திடீர் கடை அடைப்பு போராட்டத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story