பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் இன்று வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வந்தவாசி சாலையில் கடை நடத்தி வரும் வியாபாரியிடம் சென்று வரி செலுத்த வேண்டிய தவணை நேரம் முடிந்து விட்டது. எனவே, வரியை உடனடியாக செலுத்துங்கள் என்று கடை முன்பு சாலையில் நின்று கொண்டு அதிகாரிகள் சத்தமாக கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து வணிகர் பேரவை சங்கத்திலும், அனைத்து வியாபாரிகள் சங்கத்திலும் தன்னை அவமானப்படுத்தும் வகையில் சாலையில் இருந்து வரி கேட்டார் என்று வியாபாரி முறையிட்டார்.
இதையடுத்து வணிகர் பேரவை அமைப்பு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் பாண்டியன், நகர துணைத்தலைவர் மணி மற்றும் வியாபாரிகள் சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜி.முனிரத்தினம் ஆகியோர் சென்று வியாபாரிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.