இ-போஸ்ட் அனுப்பும் போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு
12 மாத வாடகை முன்பணம் தொடர்பாக இ-போஸ்ட் அனுப்பும் போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்டம் சார்பில் சண்முகனடியார் மண்டபத்தில் அவசர கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சி கடை வணிகர்கள் சங்க தலைவர் பிச்சாண்டி வரவேற்றார். வணிகர் சங்க செயலாளர் ஏ.வி.எம்.குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் குறித்து வணிகர்கள் கூறுகையில், வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளது. தற்போது கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால் பல வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் 12 மாத வாடகை முன்பணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வணிகர்களுக்கு அதிர்ச்சியையும், துன்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் வேலூரில் உள்ள கடைகளில் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். 12 மாத வாடகையை முன்பணமாக செலுத்துங்கள் என்று கூறுவது தவறாக முடிவாகும். இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வருகிற 27-ந்தேதி தபால் நிலையத்தில் இருந்து இ-போஸ்ட் அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.