வணிக வளாகம் கட்டும் முன்பே இடிந்த கடையில் வணிகம் செய்யும் வியாபாரிகள்


வணிக வளாகம் கட்டும் முன்பே இடிந்த கடையில் வணிகம் செய்யும் வியாபாரிகள்
x

செய்யாறில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு கடைகள் வைக்க இடம் பிடிப்பதற்காக இடிக்கப்பட்ட கடைகளில் ஆபத்தான நிலையில் வியாபாரம் செய்வதால் விபரீதம் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை



செய்யாறில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு கடைகள் வைக்க இடம் பிடிப்பதற்காக இடிக்கப்பட்ட கடைகளில் ஆபத்தான நிலையில் வியாபாரம் செய்வதால் விபரீதம் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாரச்சந்தை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் சார்பில் காய்கறி மார்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த கடைகள் சேதமடைந்ததால் முழுமையாக அகற்றிவிட்டு அப்பகுதியில் புதியதாக வணிக வளாகம் அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக வணிகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் ரூ.4 கோடியே 44 லட்சம் மதிப்பில் 131 கடைகளுடன் நிரந்தரமாக வணிகவளாகம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடைந்து நகராட்சியின் சார்பில் கடை வாடகைக்கு ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆபத்தான முறையில்...

இதற்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த நகராட்சி வணிக வளாகத்தினை இடித்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் பிரதான சாலையின் முன் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் சுவர்கள் இடிக்கப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த இடத்தில் வியாபாரிகள் சிலர் அமர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

சேதமடைந்த வணிக வளாகத்தை முழுமையாக அகற்றாமல் ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருவதால் அங்குள்ள வியாபாரிகள் இறைச்சி, காய்கறிகள் பழங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றை சுகாதாரமற்ற நிலையில் அங்கு வைத்து விற்பனை செய்கின்றனர்.

ஆபத்தை உணராத பொதுமக்களும் அந்த கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இறைச்சி பிரியர்கள் அங்குள்ள கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக சென்று மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகள் வாங்கி செல்ல காத்திருக்கின்றனர்.

எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள சுவரின் அடியில் ஆபத்தை உணராமல் வியாபாரிகளும், பொதுமக்களும் செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விபரீதம் நடந்தால் அதற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் கேள்வி.

எனவே அங்கு வணிகம் செய்வதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

10 சதவீத பணிகள் கூட முழுமை பெறவில்லை

ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அறிவித்த நிலையில் இதுவரை 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒப்பந்ததாரர் உரிய கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் முடியும் வரை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். செய்யாறில் பிரதான சாலையாக திகழ்வதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு இன்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொது ஏலமுறை



இது குறித்து வியாபாரி மாரி கூறுகையில், ''திருவத்திபுரம் நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டுவது மிகவும் வரவேற்கத்தக்கது. அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை முற்றிலும் அகற்றிவிட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். பணிகள் தொடங்கியும் அங்குள்ள வியாபாரிகள் மிகவும் ஆபத்தான நிலையில் அங்கு இருந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கிட வேண்டும் என அங்கிருந்து காலி செய்யாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுஏலம் முறையிலேயே கடை ஏலம் விடப்பட வேண்டும் என்றார்.



இளங்கோ என்பவர் கூறுகையில், ''நகராட்சியின் சார்பில் கட்டப்படும் புதிய வணிக வளாகம் உரிய நேரத்தில் பணிகளை முடித்து வியாபாரிகள் பயன்படும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒப்பந்ததாரர் பணியை விரைந்து முடிக்க அங்குள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆபத்தான நிலையில் விற்பனை செய்வதை தவிர்த்து விட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். பணிகள் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும் கட்டுமான பணி மெத்தனமாக நடக்கிறது. துரிதமாக பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


Next Story