தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வணிகர்கள்பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கூடாது: மேயர் ஜெகன்பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்று வணிகர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்
பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பன்பாட்டுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தீவிரமாக அமல்படுத்த மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தூத்துக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பது குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களையோ, பிளாஸ்டிக் பைகளையோ வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம். பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் பா.விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் பாஸ்கர், ராஜலிங்கம், சொக்கலிங்கம், ராஜா, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.