சரபோஜி மார்க்கெட்டில் தரைக்கடைக்கு அனுமதித்ததால் வியாபாரிகள் மறியல்
சரபோஜி மார்க்கெட்டில் தரைக்கடைக்கு அனுமதித்ததால் வியாபாரிகள் மறியல்
தஞ்சை அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சரபோஜி மார்க்கெட்டில் தரைக்கடைக்கு அனுமதித்ததால் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதுடன் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வடிகால் கட்ட முடிவு
தஞ்சை அண்ணாசாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அண்ணாசிலையின் பின்புறம் பகுதியில் சாலையோரம் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இந்த வடிகால் அண்ணாசாலையில் உள்ள ஒரு தியேட்டர் வரை கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அந்த தியேட்டர் முதல் சரபோஜி மார்க்கெட் வரை வடிகால் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இடிப்பு
இதனால் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றுகாலை தொடங்கியது. சாலையோரம் இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும் மளிகைக்கடைகள், முட்டை கடைகள், டீக்கடைகள் என அனைத்து கடைகளின் முன்பு போடப்பட்டு இருந்த மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டு, சிமெண்டு தளங்கள் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
ஆணையரிடம் கோரிக்கை
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டார். அப்போது தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.
உடனே சரபோஜி மார்க்கெட் வளாகத்திற்குள் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை அமைத்து வியாபாரம் செய்யலாம் எனவும், சாலையோரத்தில் இனிமேல் வியாபாரம் செய்யக்கூடாது எனவும் ஆணையர் தெரிவித்தார்.
எதிர்ப்பு
இதையடுத்து சரபோஜி மார்க்கெட் வளாகத்திற்குள் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆணையர் சரவணகுமாரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.
ஆனாலும் சரபோஜி மார்க்கெட் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டு இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தபடாத காரணத்தினால் ஆத்திரம் அடைந்த சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் திடீரென மார்க்கெட்டிற்கு வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், சரபோஜி மார்க்கெட் வளாகத்திற்குள் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படும். இவர்களை மார்க்கெட்டிற்கு வெளியே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மார்க்கெட் வளாகத்திற்குள் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதித்தால் நாங்கள் கடைகளின் சாவிகளை ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.
கடையடைப்பு
இதையடுத்து தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை மார்க்கெட் வளாகத்திற்குள் இருந்து போலீசார் அப்புறப்படுத்தியதுடன் வெளியே சாலையோரத்தில் தற்காலிகமாக வியாபாரம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இவர்கள் வெளியே சென்றதால் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து ¾ மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
இது குறித்து சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, தரைக்கடை, தள்ளுவண்டி கடைகள் மார்க்கெட் வளாகத்திற்குள் நிரந்தரமாக வரக்கூடாது என்பதை வலியுறுத்தி 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 22-ந் தேதி ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வடிகால் அமைக்கும் பணியின் காரணமாக 15 கடைகள் வரை இடிக்கப்பட உள்ளது. மேலும் தியேட்டர் அருகில் உள்ள அகழி ஓரத்தில் கீழே வடிகாலும், மேலே சாலையும் அமைத்து வண்டிப்பேட்டை வரை இருசக்கர வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.