சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் மறியல் போராட்டம்


சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் மறியல் போராட்டம்
x

திருவண்ணாமலை நகராட்சி கடை வாடகையை குறைக்க வலியுறுத்தி சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி கடை வாடகையை குறைக்க வலியுறுத்தி சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 440 கடைகள் உள்ளன. இதில் தற்போது 360 கடைகள் செயல்பாட்டில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தேரடித் தெருவில் ஜோதி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இதில் 138 நகராட்சி கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகள் மூலம் நகராட்சிக்கு சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜோதி பூ மார்க்கெட்டில் நகராட்சி அலுவலர்கள் வாடகை பாக்கியை வசூலிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் வாடகை பாக்கி அதிகம் உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து உயர்த்தப்பட்ட கடை வாடகையை குறைக்கக் கோரி பூ வியாபாரிகள் தேரடித் தெருவில் ஜோதி மார்க்கெட் முன்பு சாலையில் பூக்களை கொட்டி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வாடகையை குறைக்க வேண்டும்

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில், தமிழக அரசு வாடகையை குறைக்க ஒரு குழுவை அமைத்துள்ள நிலையில் திருவண்ணாமலை நகராட்சி திடீரென வாடகையை 200 மடங்கு உயர்த்தி வசூலிப்பதையும், வாடகையை கட்டவில்லை என்றால் கடையை சீல் வைப்போம் என மிரட்டல் விடுக்கும் அலுவலர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து வாடகையை குறைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்த்தப்பட்ட வாடகை நிலுவை தொகையில் பாதியை கட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அலுவலர்கள், வியாபாரிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். வியாபாரிகளின் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story