நடைபாதையில் வியாபாரிகள் கடைகள் வைக்கக்கூடாது-மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நடைபாதையில் வியாபாரிகள் கடைகள் வைக்கக்கூடாது என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
வேலூர்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நடைபாதையில் வியாபாரிகள் கடைகள் வைக்கக்கூடாது என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். அங்குள்ள நடைபாதையில் வியாபாரிகள் காய்கறி கடைகள் வைத்து விற்பனை செய்து வந்தனர். அதனால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சென்று வருவதற்கு சிரமத்துக்கு உள்ளாகினர். இதைக்கண்ட கமிஷனர் நேதாஜி மார்க்கெட்டிற்குள் நடைபாதையில் கடைகள் மற்றும் கடையின் விளம்பர பதாகைகள் எதுவும் வைக்கக்கூடாது. தற்போது நடைபாதையில் கடைகள் வைத்துள்ளவர்கள் அவர்களாகவே கடைகளை அகற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நடைபாதை கடைகள் அகற்றப்படும். நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை வாகனங்களை உள்ளே கொண்டு வந்து அள்ளிச்செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை வியாபாரிகள் அகற்ற வேண்டும். இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து கமிஷனர் வேலூர் லாங்குபஜார், சுண்ணாம்புக்கார தெருவில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேலூர் மாநகர் நலஅலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.