விவசாயிகளுக்கான பாரம்பரிய பயிர் ரக கண்காட்சி
வேலூரில் விவசாயிகளுக்கான பாரம்பரிய பயிர் ரக கண்காட்சி நடக்கிறது.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட அளவில் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்மா திட்டத்தின் கீழ் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாரம்பரிய பயிர் ரக கண்காட்சி நடக்க உள்ளது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
கண்காட்சியில், உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் வகைகள் காட்சிபடுத்தப்பட்டு வேலூர் மாவட்ட விவசாயிகளிடையே பிரபலப்படுத்தப்பட உள்ளது. சாகுபடி தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கான பாரம்பரிய பயிர் சாகுபடி தொடர்பான விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் விளக்க உள்ளனர்.
விவசாயிகளால் பாரம்பரிய பயிர் சாகுபடி செய்து உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை காட்சிபடுத்தவும் மற்றும் விற்பனை செய்யவும் அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளால் அறிமுகப்படுத்தப்படும் பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள பரிசீலிக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.