மேலூரில் பாரம்பரிய மாங்கொட்டை திருவிழா


மேலூரில் பாரம்பரிய மாங்கொட்டை திருவிழா
x

மேலூரில் பாரம்பரிய மாங்கொட்டை திருவிழாவில் நேற்று பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர் எழுந்தருளினார்.

மதுரை

மேலூர்,

மேலூரில் பாரம்பரிய மாங்கொட்டை திருவிழாவில் நேற்று பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர் எழுந்தருளினார்.

மாங்கொட்டை திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த தலமான திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2-ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாளான நேற்று திருமறைநாதர் ஒரு பல்லக்கிலும், வேதநாயகி அம்மன் மற்றொரு பல்லக்கிலும், பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாகவும் திருவாதவூரில் இருந்து மேலூருக்கு மாட்டு வண்டியில் புறப்பட்டனர். கிராமங்களில் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு திருமறைநாதர் அருள்புரிந்தார். பின்னர் மேலூர் நகரின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள தாசில்தார் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார். அங்கு பாரம்பரிய வழக்கப்படி மேலூர் தாசில்தார் இளமுருகனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின் மேலூர் நகரில் அனைத்து வீதிகளிலும் திருமறைநாதர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

மேலூரின் மையப்பகுதியில் திருமறை நாதர் தங்கலாகி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். இரவில் விடிய விடிய பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் அதிகாலை நேரத்தில் திருவாதவூருக்கு திருமறைநாதர், வேதநாயகி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்தி பரிவாரங்களுடன் திருவாதவூருக்கு புறப்பட்டனர். விழாவின் தொடர்ச்சியாக 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மாட்டு வண்டிகள்

முன்னொரு காலத்தில் இந்த விழா மதுரை சித்திரை திருவிழா போன்று சிறப்பாக நடைபெற்றது. அப்போது மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் மாட்டு வண்டிகளில் வந்து கலந்து கொள்வார்கள். வைகாசி மாதம் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த மாங்கனிகளை, கொண்டு வந்து இந்த விழாவில் பக்தர்கள் கூட்டத்தில் வீசி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு பக்தர்கள் மாம்பழங்களை சாப்பிட்டு போடும் மாங்கொட்டைகள் தெருக்களில் பரவலாக கிடப்பதால் இந்த திருவிழா மாங்கொட்டை திருவிழா என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

தாசில்தாருக்கு மரியாதை

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மேலூரில் ஒரு சிவாச்சாரியார் தங்கியிருந்தார். அப்போது மேலூரில் பணியாற்றிய தாசில்தார் அந்த சிவாச்சாரியாரின் சீடராக இருந்துள்ளார். சிவாச்சாரியார் தினமும் மேலூரில் இருந்து நடந்து திருவாதவூருக்கு சென்று அங்கு திருமறை நாதரை வழிபட்டு வருவது வழக்கம். வயது முதிர்வால் அந்த சிவாச்சாரியார் நடக்க முடியாத நிலை ஏற்படவே அவரது கனவில் தோன்றிய சிவன் அந்த சிவாச்சாரியார் இருக்கும் இடத்துக்கே வருவதாக அருள்வாக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்போது தாசில்தாரராக இருந்தவர் உதவியதும் தெரியவந்தது. அன்று முதல் திருமறை நாதர் மேலூருக்கு வருவதும், அப்போது பாரம்பரிய வழக்கப்படி மேலூரில் பணிபுரியும் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.


Next Story