பாரம்பரிய நெல் திருவிழா


பாரம்பரிய நெல் திருவிழா
x

சீர்காழியில், பாரம்பரிய நெல் திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக நடத்தப்படும் இந்த திருவிழாவின் 8-ம் ஆண்டு விழா நேற்று சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை மூத்த உறுப்பினர் வக்கீல் சுந்தரையா தலைமை தாங்கினார். செயலாளர் நலம் சுதாகர் முன்னிலை வகித்தார். உறுப்பினர் கருமுத்து வரவேற்று பேசினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்

விழாவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் கலந்துகொண்டு நெல் திருவிழாவை தொடங்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்ட நெல் ரகங்களை பார்வையிட்டார். இதில் தஞ்சை கோ.சித்தர், தமிழர் மேலாண்மையை சேர்ந்த ஞானப்பிரகாசம், விதை பாதுகாப்பாளர் வேதாரண்யம் சிவாஜி, பனை ஆனந்த், பண்ணையம் ஒருங்கிணைந்த காசிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்லின் நன்மைகள் மற்றும் மரபு வழி விவசாயம் குறித்து கருத்துரையாற்றினர். அதனைத்தொடர்ந்து துணைவேந்தர் கதிரேசன் மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது, பாரம்பரிய நெல் விதை ரகங்களை வழங்கினர்.

இயற்கை விவசாயிகள்

இதில், 150-க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. சிறுதானியங்களை கலந்த ரசாயன கலப்படமற்ற ஐஸ்கிரீம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த நெல் திருவிழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.



Next Story