பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும்


பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும்
x

உடல்நலத்தை பேணிக்காக்க பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

வேலூர்

உடல்நலத்தை பேணிக்காக்க பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

கண்காட்சி

விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி கண்காட்சியை பார்வையிட்டு கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜெயக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

இதில் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு விளக்கி பேசினர்.

விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-

பூமி இருக்கும் வரை உழவுத்தொழில் இருக்கும். இதற்கு முன்புவரை விவசாயத்துக்கு வழிகாட்டி இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் ஆகியவற்றின் வருகையால் விவசாயம் பெருகி விளைச்சல் அதிகரித்து வருகிறது. இவற்றை தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தட்பவெப்ப மண்டலம் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டலம் சாராத உணவு பொருட்களை இங்கே கொண்டு வந்து நம்மை பழக்கப்படுத்தி உள்ளனர். இதனால் நமது உடலுக்கு உள்ளே பல்வேறு வகையான உற்பத்தியாகும் நோய் வருகிறது.

பாரம்பரிய நெல் ரகங்கள்

இதை எல்லாம் தவிர்ப்பதற்காக தான் நம்முடைய வெப்ப மண்டலத்திற்கு உண்டான உணவு பொருட்களை மீட்டெடுத்து அதை பயிர் செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் பல உள்ளது. அதை நாம் சாப்பிட்டால் நோய்கள் வராது.

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்புகள், மீன் வகைகள், நாட்டு கோழிகள், நாட்டு பசு இவை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை எல்லாம் கட்டாயம் பின்பற்றி உற்பத்தியை பெருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டம் சென்னை மற்றும் பெங்களூரு மாநகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் நமது மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்களை வெளிச்சந்தைகளில் விற்க ஏதுவாக உள்ளது. எனவே விளைப்பொருட்களை எளிதாக விற்கலாம். தற்போது விளைநிலங்களுக்கு அதிகப்படியான தண்ணீர் பாய்ச்சி விளைவிப்பதற்கு பதில், சொட்டு நீர் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story