பழுதடைந்து நின்ற சரக்கு ரெயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நாகையில் சரக்கு ரெயில் பழுதடைந்து நின்றதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகையில் சரக்கு ரெயில் பழுதடைந்து நின்றதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சரக்கு ரெயில்
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தினந்தோறும் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து 5 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நாகை வழியாக மேட்டூருக்கு சென்று கொண்டிருந்தது. நாகை ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென என்ஜின் பழுதடைந்ததால் ரெயில் நின்றது. இதை சற்றும் எதிர்பாராத ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து என்ஜின் பழுதை சரிசெய்யும் முயற்சி நடந்தது. ஆனால் முயற்சி பலன் அளிக்கவில்லை. நாகை -அக்கரைப்பேட்டை சாலையில் ரெயில்வே கேட் குறுக்கே ரெயில் நின்றதால், ரெயில்வே கேட் மூடப்பட்டு, அக்கரைப்பேட்டை, அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகம், வடக்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.
நாகை முதலாவது கடற்கரை சாலை, அக்கரைப்பேட்டை சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் அங்கு சென்று வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மற்றொரு என்ஜின்
இதனால் வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் நாகையில் நின்ற மற்றொரு பயணிகள் ரெயில் என்ஜினை நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலுடன் பொருத்தி, ரெயிலை நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இதன் பின்னரே அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் திறக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.