தீபாவளி பண்டிகை கோலாகலம்: ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது
தீபாவளி பண்டிகை காரணமாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தீபாவளி பண்டிகை காரணமாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டதால், தீபாவளி கொண்டாடத்துக்கு தேவையான ஜவுளிகளை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஈரோடு மாநகரிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் ஜவுளி வாங்க ஈரோட்டில் குவிந்தார்கள். அவர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்ததால் மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. குறிப்பாக கடைவீதிகளுக்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு மேட்டூர்ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), சத்திரோடு, பெருந்துறைரோடு, காந்திஜிரோடு, நேதாஜிரோடு, நசியனூர்ரோடு ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தடுப்புச்சுவர்
மேட்டூர்ரோட்டின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முனிசிபல்காலனி பிரிவில் மட்டும் வாகனங்கள் செல்வதற்காக இடைவெளி விடப்பட்டு இருந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கே அதிக இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து முனிசிபல்காலனி பிரிவிலும் தடுப்பு வேலிகளை போக்குவரத்து போலீசார் அமைத்தனர். இதன் காரணமாக சாலையை கடக்க முடியாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றாலும், சுவஸ்திக் கார்னர் அல்லது அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா சென்று திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பன்னீர்செல்வம் பூங்கா சிக்னலிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அங்கு சிக்னலுக்காக நீண்ட நேரமாக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். கடந்த சில நாட்களை விட நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.