அவினாசியில் போக்குவரத்து நெரிசல்
அவினாசியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவினாசியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவினாசி
அவினாசி நகரம் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவில், அரசு தொடக்கப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ்நிலையம், தபால் அலுவலகம், நெடுஞ்சாலை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது.
அதேபோல் அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நான்கு ரதவீதிகளில் 10-க்கு மேற்பட்ட மண்டபங்கள், 5 வங்கிகள், ஜவுளி, நகை, மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடுத்தடுத்து உள்ளன.
சேவூர் ரோட்டில் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கிளை சிறைச்சாலை மற்றும் ஏராளமான வணிக கடைகளும் உள்ளன. அவினாசி வழியாக பல ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அவினாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் தேவைக்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் போது அந்த வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் வாகனங்கள் நிற்பதால் பல வேலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலையோர ஆக்கிரமிப்பு
அத்துடன் அவினாசி புது பஸ் நிலையம் முதல் சேவூர் ரோடு சிந்தாமணி ஸ்டாப் வரை நூற்றுக்கணக்கான சாலையோர கடைகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்தி ரோட்டில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்துபேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்