கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து பாதிப்பு


கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து பாதிப்பு
x

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்ததால் பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி கூடலூரில் இருந்து மசினகுடிக்கு ஒரு வாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. பின்னர் மாயாற்றிலும் தரைபாலத்திற்கு கீழ் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து விடப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வந்தது.

தரைப்பாலம் மூழ்கியது

இந்தநிலையில் கூடலூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தெப்பக்காடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி, தண்ணீர் சீறி பாய்ந்தது. இதன் காரணமாக போலீசார், வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் பாதுகாப்பு கருதி கூடலூர்-மசினகுடி இடையே தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தினர்.

பின்னர் மதியம் ஒரு மணிக்கு மழை நின்றது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாயாற்றில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் தவிர தரைப்பாலம் வழியாக படிப்படியாக போக்குவரத்து விடப்பட்டது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.Next Story