பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு


பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கர்நாடக எல்லையில் சரக்கு லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

தமிழக-கர்நாடக எல்லையில் சரக்கு லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதடைந்த லாரி

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர், ஊட்டி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் கேரள மாநிலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தினமும் சரக்கு லாரிகளில் கூடலூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து அதிகம் உள்ள நெடுஞ்சாலையாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடகா எல்லையான கக்கனல்லா நுழைவு வாயில் பகுதியில் வந்த போது, சரக்கு லாரி பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. இதனால் பிற கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மசினகுடி போலீசார், கர்நாடகா போலீசார் விரைந்து வந்து சரக்கு லாரியை அப்புறப்படுத்த முயன்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால், மின்னணு முறையில் (சென்சார்) இயங்கக்கூடிய சரக்கு லாரி என்பதால் டிரைவர்கள், போலீசாரால் அகற்ற முடியவில்லை. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே சிறிய ரக வாகனங்கள் மட்டுமே வழக்கம்போல் இயக்க முடிந்தது. ஆனால், கனரக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் கர்நாடகா வனப்பகுதி வழியாக கனரக வாகனங்களை இயக்க போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கனரக வாகனங்களும் இயக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, மின்னணு முறையில் இயங்கக்கூடிய சரக்கு லாரி என்பதால் உடனடியாக பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் வந்த பிறகு சரி செய்ய முடியும். இதனால் 2 மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து சீராக நடைபெற முடியாத வகையில் பாதிப்பு ஏற்பட்டது என்றனர். பின்னர் மாலையில் சரக்கு லாரி பழுது சரிசெய்யப்பட்டு, அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.


Next Story