கொடைக்கானலில் மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

கொடைக்கானலில் காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மலைப்பாதையில் விழுந்த மரம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் இதமான சூழலும் நிலவியது. உறைபனி மற்றும் வாட்டி வதைத்த குளிரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. மேலும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசியது.

இதனால் இன்று அதிகாலை கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் பூலத்தூர் பிரிவு பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் அகற்றப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.

மின்தடையால் அவதி

மேலும் கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததுடன், காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்தன. இதன்காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதியடைந்தனர்.

அப்போது மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மின்கம்பிகள் மீது விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றினர். அதன்பிறகு மின்சாரம் சீராக வழங்கப்பட்டது. கொடைக்கானலில் மழை காரணமாக நேற்று பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி நடமாடினர்.


Next Story