வேலூரில் லாரிகள் மோதலால் போக்குவரத்து பாதிப்பு
வேலூரில் லாரிகள் மோதலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் பெருமுகையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி டிரெய்லர் லாரி பின்னால் மோதி சாலையில் நின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனை அறிந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கரத்தில் வந்தவர்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றனர். அதனால் சர்வீஸ் சாலை பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெருமுகையிலிருந்து சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் வரை வாகனங்கள் வரிசையாக நின்று ஊர்ந்து சென்றது. இதன் காரணமாக வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.