தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
கீழ் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன.
கோத்தகிரி,
கீழ் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன.
தரைப்பாலம் மூழ்கியது
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கீழ் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அத்தியூர் மட்டம் அருகே சீனிமட்டம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி அரசு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடினமாலா கிராமத்தில் இருந்து கரிக்கையூர் செல்லும் மாற்றுச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டது. தேனாடு அருகே கரக்கோடுமட்டம் கிராமத்தில் 2 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர்களில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக கடினமாலாவை சேர்ந்த சிந்தாமணி, பார்வதி, ராஜூ மற்றும் அரக்கோடு மல்லிகொம்பை கிராமத்தில் 2 பேர் என 5 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
வீடுகள் இடிந்தன
கடினமாலாவில் நஞ்சுண்டன் என்பவரது வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வீடு முழுமையாக இடிந்து பாதிக்கப்பட்ட நஞ்சுண்டனுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.5,100 மற்றும் வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்த மற்ற 5 பேருக்கு ரூ.4,100 வழங்க பரிந்துரை செய்தனர். நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கீழ் கோத்தகிரியில் 63 மி.மீ., கோத்தகிரியில் 9 மி.மீ., கோடநாட்டில் 6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.