சூறாவளிக்காற்றில் மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


சூறாவளிக்காற்றில் மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

சூறாவளிக்காற்றில் மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி

மணப்பாறை:

பலத்த மழை

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டிருந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவித்தனர். மேலும் வெப்பக்காற்றும் வீசியதால் மக்கள் நிழலை தேடியும், வீடுகளுக்குள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் மாலை நேரத்திற்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன் இடி, மின்னலும் ஏற்பட்டது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியது. ஒரு சில இடங்களில் தூரல் மழை பெய்ததுடன், மரவனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

போக்குவரத்து பாதிப்பு

இந்நிலையில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்தது. மரவனூர், பாலப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு சாலை அருகே சாலையோரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்தது. இதனால் மின்கம்பிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தீப்பற்றி எரிந்த மரம்

இது பற்றி தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை நிறுத்தினர். மேலும் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் அணைக்கருப்பகோவில்பட்டி அருகே பனைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் திடீரென மரம் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்ததில் மரம் கருகியது.


Next Story