சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பருவமழை தீவிரம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இரவு, பகலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள சர்க்கார்மூலா பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த கூடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொட்டும் மழையில் மரத்தை அறுத்து அகற்றினர். இதனால் சுமார் 1.30 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதேபோல் இன்று அதிகாலை கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பைக்காரா என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் சரிந்து விழுந்தது.

கடுங்குளிரில் அவதி

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் காத்து நின்றன. இதனால் வாகனங்களில் இருந்தவர்கள் கடும் குளிரில் மிகுந்த அவதி அடைந்தனர். தொடர்ந்து ஊட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அறுத்து அகற்றினர். இதனால் காலை 5.15 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இது தவிர ஊசி மலை காட்சி முனை அருகே மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் இணைணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் கூடலூர்-ஓவேலி சாலையில் கவிப்பாரா எஸ்டேட் பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்தது.

மின் வினியோகம் பாதிப்பு

இதனால் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஹெல்த்கேம்ப், ஓவேலி பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின் கம்பிகளை சீரமைக்கும் பணிக்காக கூடலூர் மின்சார வாரிய ஊழியர்கள் கெவிப்பாரா எஸ்டேட்டுக்குள் சென்றனர். ஆனால் அங்கு காட்டு யானைகள் முகாமிடடு இருந்ததால், அந்த பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். அதன்பின்னர் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மின் வினியோகம் நடைபெற்றது. இருப்பினும் ஓவேலி பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story