சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் பெரியாக்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து, மின்கம்பத்தின் மீது அதைத்தொடர்ந்து சாலையிலும் விழுந்தது. இதில் மின்கம்பமும் உடைந்து சாலையில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு, அங்கிருந்த மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மரம் விழுந்து கிடந்ததால் செந்துறை-பெண்ணாடம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல், வந்த வழியே திரும்பி சென்றது.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் கொட்டும் மழையிலும் மின் கம்பிகளை அகற்றினர். மேலும் உடனடியாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக தளவாய் பகுதியில் உள்ள உப்பு ஓடையில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. அதன் மீதுள்ள தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஓடையில் தண்ணீர் அதிகமாக செல்வதை கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மழை மற்றும் பேரிடர் கால பாதிப்புகள் குறித்து இம்மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 04329-228709 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.