வைத்தீஸ்வரன் கோவில் 4 வீதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு
முகூர்த்த நாளையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைத்தீஸ்வரன் கோவில் 4 வீதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சீர்காழி:
முகூர்த்த நாளையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைத்தீஸ்வரன் கோவில் 4 வீதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வைத்தீஸ்வரன் கோவில்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைத்தியநாத சாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துகுமாரசாமி, அங்காரகன், (செவ்வாய் ) தன்வந்திரி ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் இந்த கோவில் வளாகத்தில் திருமணம் நடந்தால் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். இதன் காரணமாக முகூர்த்த காலங்களில் தினமும் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இந்தநிலையில் நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களின் வாகனங்கள் வைத்தீஸ்வரன் கோவில் நான்கு வீதிகளிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலைய வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று பாதை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.