ராமேசுவரத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் நகருக்குள் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்,
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் நகருக்குள் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தருவார்கள். இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் நகருக்குள் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ராமேசுவரத்திற்கு நாளை வரும் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையத்திலிருந்து சிவகாமி நகர், சல்லிமலை, பாரதி நகர், சவுந்தரி அம்மன் கோவில் தெரு, சம்பை, மாங்காடு சாலை வழியாக ஜெ.ஜெ. நகரில் உள்ள கோவில் பார்க்கிங் மற்றும் நகராட்சி வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல வேண்டும். கோவிலில் இருந்து புறப்படும் வாகனங்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து புறப்பட்டு ஜெ.ஜெ.நகர், கோவிலின் மேற்கு ரத வீதி சாலை, திட்டக்குடி சாலை வழியாக பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
1000 போலீசார் பாதுகாப்பு
தனுஷ்கோடி செல்லும் வாகனங்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து மேற்கு வாசல், திட்டக்குடி சாலை, தேவர் சிலை சாலை வழியாக தனுஷ்கோடி செல்ல வேண்டும். தனுஷ்கோடியில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு, ராம தீர்த்தம், நகர் காவல் நிலையம் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும். ராமேசுவரம் பஸ் நிலையம், பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்துமிடம் வரை சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குற்ற செயல்களை தடுத்து கண்காணிக்கும் விதமாக ராமேசுவரம் கோவிலை சுற்றிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரம் கோவில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருவார்கள் என்பதால் ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர்கான் மற்றும் நகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை முதல் கோவில் ரத வீதி மற்றும் நகரின் முக்கிய சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டும் வருகின்றன.