காரைக்குடி கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்குடி கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காரைக்குடி,
ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகைக்காக கடைவீதிகளில் ஜவுளி பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் கூட்டம், கூட்டமாக வந்து செல்வார்கள். அப்போது தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை இருக்கும். வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். சிவகங்கை நேரு பஜார், தேவகோட்டை கடை வீதி பஜார், காரைக்குடி செக்காலை வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
காரைக்குடி நகர் போலீசார் சார்பில் ஏற்கனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதுரை, திருப்பத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்களை கழனிவாசல் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கும், புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேவகோட்டை, ராமநாதபுரம் செல்லும் பஸ்களை செஞ்சை வழியாகவும் இயக்க அறிவுறுத்தி அந்த வழித்தடத்தில் தற்போது போக்குவரத்து இயங்கி வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடை வீதிகள், கண்ணன் பஜார், செக்காலை சாலை வீதி உள்ளிட்ட வீதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மேலும் இந்த சாலையில் இருசக்கர வாகனம், மினி சரக்கு வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால் இந்த நெரிசல் மேலும் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.