சிங்கம்புணரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்


சிங்கம்புணரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் தொடரும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நகர் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு கயிறு தொழில், எண்ணெய் நிறுவனம், பாக்கு மட்டை கம்பெனி உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகளும்,, ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதனால் இந்த பகுதி தொழில் வளம் மிகுந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நகரில் போக்குவரத்து சாலைகள் மிகவும் குறுகியதாகவே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுதவிர சிங்கம்புணரி பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொருட்கள் கனரக வாகனமான லாரிகளில் வந்து இறங்குகிறது. இதற்கு முன்பு காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டும் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படும். அப்போது இந்த கனரக வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்கி விட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் இருந்தது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்நிலையில் கடந்த சில காலமாக காலை 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் உள்ள ரோட்டில் இந்த கனரக லாரிகளை நிறுத்தி விட்டு பொருட்கள், மூடைகளை இறக்குகின்றனர். அந்த நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்கள், பஸ் போக்குவரத்து, பல்வேறு அலுவல் வேலைகளுக்கு செல்வோர்கள் செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகள் வழியாக ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-

சிங்கம்புணரி நகரில் அதிகாலை 5 முதல் 7 மணிக்குள் போக்குவரத்து குறைவாக இருக்கும். அச்சமயத்தில் இதேபோன்ற கனரக லாரிகளில் சரக்குகளை இறக்கிவிட்டு சென்றால் எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. ஆனால் கடந்த சில தினங்களாக காலை 8 மணிக்கு மேல் கனரக லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசார் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story