போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மாரண்டஅள்ளி


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மாரண்டஅள்ளி
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் சாலையை விரிவுபடுத்தி சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் சாலையை விரிவுபடுத்தி சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

50 கிராமங்களுக்கு மையப்பகுதி

தர்மபுரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர பகுதியில் ஒன்றாக மாரண்டஅள்ளி பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி பகுதியில் 3500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 14 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ள மாரண்டஅள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன.

மாரண்டஅள்ளியில் உள்ள ரெயில் நிலையம் மூலமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை தொடர்பாகவும், பல்வேறு பணிகளுக்காகவும் பாலக்கோடு, தர்மபுரி ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகிறார்கள். மாரண்டஅள்ளி நகர பகுதிக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள் அதிக அளவில் மாரண்டஅள்ளி நகர பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக நகரின் மையப்பகுதியான 4 ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கி நிற்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது. இத்தகைய நேரங்களில் ஆம்புலன்சு வாகனங்கள் கூட இந்த பகுதியை எளிதாக கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண 4 ரோடு பகுதியில் சாலையை விரிவுபடுத்த வேண்டும். இங்கு ரவுண்டானா மற்றும் போக்குவரத்து சிக்னல் அமைத்து வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருக்கிறது. இது தொடர்பாக மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூடுதல் போலீசார்

தனியார் நிறுவன ஊழியர் சேகர்:-

மாரண்டஅள்ளியில் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள 4 ரோடு பகுதியில் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கடந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். இந்த பகுதியில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

புறவழி சாலை அமைக்க வேண்டும்

விவசாயி கணேசன்:-

மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து வெள்ளிச்சந்தை, மல்லாபுரம், ராயக்கோட்டை தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள் 4 ரோடு பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களால் ஏற்படும் காலதாமதத்தால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண கனரக வாகனங்கள் நகரின் வெளிப்பகுதியிலேயே கடந்து செல்லும் வகையில் புறவழி சாலை அமைக்க வேண்டும். 4 ரோடு பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.

சாலையோர பகுதிகள் சீரமைப்பு

சமூக ஆர்வலர் ரவி:-

மாரண்டஅள்ளி நகர பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்ட சாலையோர பகுதிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தபடி நிறுத்தப்படுகின்றன. இது போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் சாலையோர பகுதிகளை முறையாக சீரமைக்க வேண்டும். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும்.

பள்ளி கல்லூரி வாகனங்கள்

தொழில் முனைவோர் தினேஷ்குமார்:-

மாரண்டஅள்ளி நகர பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. 4 ரோடு பகுதியில் மாணவ மாணவிகளை ஏற்றி இறக்குவதால் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த பகுதியில் இருந்து சற்று தள்ளி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பஸ் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அங்கு பள்ளி, கல்லூரி வாகனங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டங்கள் நடத்தக்கூடாது

தையல் தொழிலாளி சரவணன்:-

மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதி ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்டதாக உள்ளது. இந்த பகுதி அருகே அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது போக்குவரத்து ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசல் கொண்ட இடங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மைதானங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story