சாலையில் நிறுத்தும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
பழனியில், சாலையில் நிறுத்தும் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி நகரில் காந்தி மார்க்கெட் சாலை, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதியில் ஜவுளி கடைகள், தங்க நகைக்கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் காலை மாலையில் இங்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகமாக வருவதால் எப்போதும் கூட்டம் இருக்கும். குறிப்பாக கடைவீதிக்கு வருபவர்கள் தாங்கள் வாகனங்களை கடைகளின் அருகிலேயே சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் எப்போதும் அணிவகுத்தே செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட கடைவீதிகளில் பகல் நேரத்திலேயே சரக்கு லாரிகள், வேன்களை நிறுத்தி பொருட்களை இறக்குகின்றனர். இவ்வாறு சாலையின் நடுவில் நிறுத்தப்படும் லாரிகளால் அங்கு கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
கடும் நெரிசல்
குறிப்பாக ஆர்.எப்.ரோடு பகுதியில் அரசு பஸ் டெப்போ உள்ளதால் அந்த சாலையில் அடிக்கடி பஸ்கள் வருகின்றன. அந்த வேளையில் லாரிகள் சாலையில் நிறுத்தி பொருட்கள் இறக்கும்போது கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆர்.எப்.ரோடு, காந்தி மார்க்கெட் சாலை ஆகிய இடங்களில் பகல் நேரங்களில் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டும், மேலும் அங்கு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கண்காணிக்கவும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
படம்-1: பழனி ஆர்.எப். ரோட்டில் சாலையின் நடுவே நிறுத்தப்பட்ட லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி.