சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x

தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மீன்மார்க்கெட்

தஞ்சை கீழவாசல் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இது தவிர உள்ளூர் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு வந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கிக்கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதிய மீன்மார்க்கெட் கட்டுவதற்காக, ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. இதையடுத்து மொத்த வியாபாரிகள் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அருகிலேயே வாகனங்களில் வைத்து மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

இதையடுத்து தற்காலிக மீன்மார்க்கெட் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கு மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இடத்தின் அருகே உள்ள சமுதாய கூட கட்டிடத்தில் மீன்மார்க்கெட் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த மீன்மார்க்கெட் பகுதியில் எப்போதும் கூட்டம் காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இங்கு மீன் வாங்க வருபவர்கள் சாலையோரத்திலேயே வாகனங்கள் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். அதுவும் வழி நெடுக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் கூட்டம் அதிகமாக வருவதால் வாகனங்களும் அதகி அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் இதர வாகனங்கள் அந்த வழியாக செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் மட்டும் அல்லாது அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். வாகன ஒட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்காலிக மீன்மார்க்கெட்டுக்கு வருபவர்கள் சாலை ஓரத்திலேயே வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. மேலும் மீன் கழிவுநீரும் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த மீன்மார்க்கெட் அருகே பிரசித்தி பெற்ற யோக நரசிம்மர் கோவில், வெள்ளைப்பிள்ளையார் கோவில் உள்ளது. மேலும் ரேஷன்கடையும் அருகில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள், ரேஷன்கடைக்கு வரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்களும் சிரமப்பட்டே செல்கின்றன. அடிக்கடி இந்த பகுதியில் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மீன்மார்க்கெட்டை அருகில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ள பகுதிக்கு மாற்றுவதாக அறிவித்தும் இன்னும் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இல்லையென்றால் வாகனம் நிறுத்துதற்காகவாவது தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.


Next Story