மேலப்புலிவார்டு சாலை, ராமகிருஷ்ணா பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்


மேலப்புலிவார்டு சாலை, ராமகிருஷ்ணா பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
x

மேலப்புலிவார்டு சாலை, ராமகிருஷ்ணா பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி

குடிநீர் குழாய் உடைப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை மற்றும் விறகுப்பேட்டை பகுதியில் செல்லும் மெயின் குடிநீர் வினியோக குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர். இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிக்காக வார்டு எண் 10, 11, 17, 19, 20, 21, 22 உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் தலைமை நீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் குழாய் மூலம் மேற்கண்ட வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை மாநகராட்சி சார்பில் மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் பெக்லைன் எந்திரம் மூலம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தோண்டினர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இருந்து மேலப்புலிவார்டு சாலை வழியாக காந்தி மார்க்கெட் சென்ற இருசக்கர வாகனங்கள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகர முடியாமல் அங்கேயே நின்றன. நீண்ட நேரமாகியும் போக்குவரத்து சீராகாததால் வாகன ஓட்டிகள் ராமகிருஷ்ணா பாலம் சென்று மதுரை ரோடு வழியாக சென்றனர். இதனால் அந்த பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் ராமகிருஷ்ணா பாலம் எதிரே உள்ள குறுகிய சாலையில் பஸ்கள் மற்றும் கார்கள் வெளியே வந்தன. இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த போக்குவரத்து பாதிப்பு 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னர் மதியம் 3 மணி அளவில் போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெருமூச்சு விட்டனர்.

பொதுமக்கள் சிரமம்

போதிய முன் அறிவிப்பு இல்லாமல் முக்கிய சாலை சந்திப்புகளில் இது போன்ற குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் போது மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் வராதது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story