பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல்


பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல்
x

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைத்தும் பயன் இல்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைத்தும் பயன் இல்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சாலை விரிவாக்கம்

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் காந்தி சிலை, பஸ் நிலையம், கடை வீதி சந்திப்பு, தேர்நிலை திடல் ஆகிய பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவே சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் ரவுண்டானா அமைத்த பிறகு வாகன நெரிசல் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி நகரில் ரூ.100 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேம்பால திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு மாற்று திட்டமாக நகரில் அரசு, தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது ரவுண்டானா அமைத்தும் போக்குவரத்து நெரிசலுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களில் நகரை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது. நேற்று நகரில் கோவை ரோட்டில் நல்லப்பா தியேட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல முடியவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும், ரவுண்டானா அமைத்தும் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை.

தீர்வு காண வேண்டும்

எனவே அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story