திண்டுக்கல்லில் நடுரோட்டில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்லில் நடுரோட்டில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் நடுரோட்டில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடைவீதி
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகிலும், அதனை சுற்றியுள்ள கடைவீதிகளிலும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள கடைகளில் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். கடைவீதிக்கு வருபவர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் தான் வருகின்றனர். அவர்கள் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை கடைகளின் அருகிலேயே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் சாலையோர கடைகளும் ஏராளமாக உள்ளன. இதனால் கடைவீதிகள் அனைத்தும் ஒருவழிப்பாதை போல் குறுகலாக இருக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், முக்கிய பிரமுகர்கள் கார்களில் செல்லும் போது எப்படி அணிவகுத்து செல்லுமோ, அதேபோல கடைவீதிகளில் அணிவகுத்து செல்லும் நிலை தான் தற்போது வரை உள்ளது. இவ்வாறு செல்லும் வாகனங்களில் ஏதேனும் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டாலே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும்.
போக்குவரத்து நெரிசல்
இந்த சூழ்நிலையில் தினமும் கடைவீதி பகுதிக்கு பகல் நேரத்திலேயே சரக்கு லாரிகள் வருகின்றன. அவை அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை இறக்கி வைப்பதற்காக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அபிராமி அம்மன் கோவில் அருகில் மற்றும் கடைவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
பகலில் கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் வர அனுமதி இல்லாத போது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதிகளில் நீண்ட நேரம் சரக்கு லாரிகளை நிறுத்த போலீசார் எப்படி அனுமதிக்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கடைவீதிகளில் பகலில் லாரிகளை நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.