4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்:தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் அவரவர் ஊர் திரும்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14, 15, 16, 17-ந் தேதி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்த தொடர் விடுமுறையை கொண்டாட சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். அதேபோல் பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அணிவகுத்து சென்ற வாகனங்கள்
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் மீண்டும் தாங்கள் வேலை பார்த்து வரும் இடங்களுக்கு திரும்பினர். இவர்கள் பெரும்பாலும் கார்களில் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
இவ்வாறு ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் சீரான வேகத்தில் மெதுவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.
விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து முத்தாம்பாளையம் சந்திப்பு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் செல்லும் மக்களும் மிகவும் அவதியடைந்தனர்.
பஸ் நிலையங்களில் கூட்டம்
மேலும் விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.