கூடலூரில் போக்குவரத்துக்கு இடையூறு: சாலையோரம் கிடக்கும் மரத் துண்டுகளை அகற்றுவது எப்போது?-வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கூடலூரில் ஆபத்தான மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் கிடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை அகற்ற அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் ஆபத்தான மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் கிடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை அகற்ற அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான மரங்கள் அகற்றம்
கூடலூர் பகுதியில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு தொடர் கன மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் வீடுகள், கட்டிடங்களும் சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன் வருவாய்த் துறையினர் கூடலூர் தாலுகா முழுவதும் ஆபத்தான மரங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆபத்தான மரங்களை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் மற்றும் ஊட்டி- மைசூரு தேசிய நெடுஞ்சாலைகள், கேரளா செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் கரையோரம் உள்ள ஆபத்தான மரங்கள் அல்லது கிளைகள் அகற்றப்பட்டது. இதேபோல் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் அறுத்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் கிளைகள், மர துண்டுகள் சாலையோரம் போடப்பட்டுள்ளது.
சாலையில் மரதுண்டுகளால் இடையூறு
இச்சாலையோரம் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், மாணவ- மாணவிகளின் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.இதனால் காலை, மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். இந்த சமயத்தில் போக்குவரத்து வாகனங்களும் அதிகமாக இயக்கப்படுகிறது. இதனால் நெரிசல் மிகுந்த பகுதியாக திகழ்கிறது. இந்த நிலையில் சாலையின் இருபுறமும் மர துண்டுகள் கிடக்கிறது.
இதன் காரணமாக மாணவர்கள் போதிய வழி இன்றி சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது வாகனங்களும் செல்லும்போது விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆபத்தான மரக்கிளைகளை அறுத்து அகற்றும் பணியில் ஆர்வமாக ஈடுபட்ட வருவாய்த் துறையினர் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள், மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெரும்பாலான இடங்களில் மரத்துண்டுகள் கிடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.