பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
வேலூர் அருகே பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பாலம்
வேலூர் சத்துவாச்சாரி சாலைகெங்கையம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்தனர். அங்கு விபத்துகள் நிகழாமல் தடுக்க சுரங்கநடைபாதை அமைக்கப்பட்டது. இதேபோன்று வேலூரை அடுத்த பெருமுகையில் ஏராளமான பொதுமக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வருகின்றனர்.
குறிப்பாக அருகில் உள்ள அலமேலுமங்காபுரம் அரசு பள்ளி மற்றும் பெருமுகை அரசு பள்ளி மாணவர்கள் கடக்கின்றனர். அந்த பகுதியில் ஏராளமான விபத்துகளும் நடந்துள்ளன.
மேலும் வேலூரில் இருந்து அரப்பாக்கம், பிள்ளையார்குப்பம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வெகுதூரம் சென்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெருமுகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ரூ.15 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி முதல் கட்டமாக தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பெங்களூரு -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கான பணியை தேசிய நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு மேலாளர் ஜஸ்டின் சாம்சன், கட்டுமான பிரிவு மேலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்களின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகையில் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைய உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளோம். இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்படும்.
8 மாதத்துக்குள்...
மேம்பால கட்டுமான பணிகள் நாளை தொடங்க உள்ளது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சர்வீஸ் சாலை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதலாக வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பால பணிகள் 8 மாதத்திற்குள் முடிக்க காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.