போக்குவரத்து நெரிசல் இல்லாத லெட்சுமாங்குடி கடைவீதி சாலை


போக்குவரத்து நெரிசல் இல்லாத லெட்சுமாங்குடி கடைவீதி சாலை
x

போக்குவரத்து நெரிசல் இல்லாத லெட்சுமாங்குடி கடைவீதி சாலை

திருவாரூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடி கடைவீதி சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாறியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, கொரடாச்சேரி சாலை என நான்கு வழி சாலை உள்ளது. இதில் திருவாரூர்- மன்னார்குடி செல்லக்கூடிய லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மிகவும் குறுகலான சாலையாகவே உள்ளது. இந்த குறுகலான சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கடந்து செல்ல முடியாத வாகனங்கள் அப்படியே பல மணி நேரம் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்தம்பித்து நின்று விடும் நிலை 40 ஆண்டுகாலமாக இருந்து வந்தது. லெட்சுமாங்குடி கடைவீதி சாலை என்றாலே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமாகவே காணப்பட்டது. அவ்வாறு ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் அவசர நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள், அரசு-தனியார் பஸ்கள், அதேபோல அரசு அலுவலகங்கள் செல்வோர், மருத்துவமனை செல்வோர், கடைவீதி சென்று வருவோர் என அனைத்து மக்களும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வந்தனர்.

ஒருவழி பாதை

இதனால் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழி பாதை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ஒருவழி பாதை அமைக்கப்பட்ட பிறகு தற்போது லெட்சுமாங்குடி கடைவீதி சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாக மாறி உள்ளது. போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவீர கண்காணிப்பில் தற்போது ஒரு வழி பாதை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் அவசர நோயாளிகள், பள்ளி மாணவர்கள், கடைவீதி சென்று வருவோர் மற்றும் அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story