நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்


நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
x

பாதாள சாக்கடை பணியால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழாய்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் உடையார்பட்டி புறவழிச்சாலை வழியாக அருகன்குளம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அதாவது உடையார்பட்டி குளத்தில் இருந்து மேற்கு நோக்கி சென்று மேம்பாலம் வழியாக தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பு சென்று அங்கிருந்து புறவழிச்சாலை வழியாக அருகன்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றன.

இதனால் தச்சநல்லூர், உடையார்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று அந்த பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

பாதாள சாக்கடை பணிகள் குறித்தும், போக்குவரத்து மாற்றம் குறித்தும் முன்அறிவிப்பு எதுவும் தெரிவிக்காததால் தான் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story