மின்சார வயர்கள் பதிக்கும் பணியால் மதுரவாயல்-ஆலப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
மின்சார வயர்கள் பதிக்கும் பணியால் மதுரவாயல்-ஆலப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், போரூர் பகுதியை சேர்ந்த மக்கள், சென்னை மற்றும் கோயம்பேடு செல்ல மதுரவாயல்-ஆலப்பாக்கம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மதுரவாயல்- வளசரவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இது விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய இந்த சாலையில் மின்சார வாரியம் சார்பில் பூமிக்கு அடியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் பதிக்கும் பணிக்காக சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இதனால் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலை மிகவும் சுருங்கிவிட்டதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதுடன், ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்வதால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்புகளும் இல்லாததால் பொதுமக்கள் அந்த பள்ளங்களில் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார வயர்கள் பதிக்கும் பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூடவேண்டும். அதுவரை இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.