விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு


விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
x

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதினால் ஏற்படும் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வேலூர்

படிக்கட்டில் பயணம்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே மாணவ- மாணவிகளுக்கும், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கும், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தினார்.

இதையடுத்து காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி வழிகாட்டுதல் பேரில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காட்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் மாணவர்களுக்கும், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிரீன்சர்க்கிள் வழியாக

அப்போது பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை, ஆரணியில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் கணியம்பாடியை வந்தடைந்ததும் மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாங்கள் கூட்ட நெரிசலில் பயணிக்கிறோம். இந்தநிலையில் நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து பஸ் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் கூடுதல் நேரமாகிறது. இதனால் பலர் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ரெயிலையும் விட்டு விட வேண்டிய நிலை உள்ளது. எனவே திருவண்ணாமலை, ஆரணி வழியாக வரும் பஸ்களை கிரீன்சர்க்கிள் வழியாக இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.


Next Story