கூடலூர்-மசினகுடி இடையே 3-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
அணை திறப்பு காரணமாக மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 3-வது நாளாக கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர்,
அணை திறப்பு காரணமாக மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 3-வது நாளாக கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
கால்வாயில் அடைப்பு
கூடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு மழை நின்று லேசான வெயில் தென்பட்டது. இதனால் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து விடும் என அனைத்து தரப்பினர் எதிர்பார்த்தனர். தொடர்ந்து பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் புறப்பட்டு சென்றனர். ஆனால், காலை 10 மணி முதல் கூடலூர் நகரில் மீண்டும் கனமழை பெய்தது.
சுற்றுவட்டார பகுதிகளான ஓவேலி, ஸ்ரீமதுரை, தேவர்சோலை, பிதிர்காடு, முதுமலை உள்பட பல பகுதிகளில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்தது. கூடலூர் நகரில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆற்று வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கூடலூர் கெவிப்பாரா பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. தொடர்ந்து ராக்லேன்ட் தெரு நடைபாதை முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது.
காட்டாற்று வெள்ளம்
இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். தகவல் அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், உடனடியாக சீரமைக்க முடியவில்லை.
இதனால் மணல் மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்து தண்ணீரை வேறு பாதைக்கு திருப்பினர். பின்னர் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.ஆர்.பஜார் அணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
3-வது நாளாக நிறுத்தம்
இதனால் முதுமலையில் மாயாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கூடலூர்-மசினகுடி இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மசினகுடி போலீசார் வாகனங்கள் செல்வதை தடுக்க, தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர் கனமழையால் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று காலை பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 1 மணி நேரம் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து மண் குவியல்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடுகள் இடிந்தது
பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வீடுகளை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த்துறை மூலம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பந்தலூர் அட்டியில் சரஸ்வதி, ஆறுமுகம், நாகராஜ், சுலைமான் ஆகிய 4 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.