மதுரை நகரில் 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்- போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் பங்கேற்பு
மதுரை நகரில் 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை நகரில் 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பிரசாரம்
சாலை பாதுகாப்பு வாரம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் (நோட்டீஸ்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோரிப்பாளையம் பகுதியில் துணை கமிஷனர்கள் ஆறுமுகச்சாமி, கவுதம் கோயல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி சிக்னலை நிறுத்தி அந்த வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உறுதிமொழி
அதே போன்று பெரியார் பஸ் நிலையத்தில் தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் தலைமையில் உதவி கமிஷனர்கள் செல்வின், ரவீந்திரபிரசாத், இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், காசி, மாட்டுத்தாவணியில் வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் தலைமையில் உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், கீழவாசலில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தெப்பக்குளத்தில் இன்ஸ்பெக்டர் தங்கமணி என போலீசார் அனைவரும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஒரே நேரத்தில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது போலீசார், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் அவர்கள் இனி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.